உமா மகேஸ்வரன் தம்பதியினர் மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் துரிதமாக செய்யப்பட்டன. உமாமகேஸ்வரனிற்கு போலியான கடவுச்சீட்டு ஒன்றும் தயாரிக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி. மாலை. கொழும்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர்கள் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் சு*ட்டுக்கொ*ல்லப்பட்டனர். பிரேத பரிசோதனைகளின் பின்னர், 14ஆம் திகதி இரவு இவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன.

15ஆம் திகதி மாலை. அஞ்சலி செலுத்த வந்தவர்களில் ஒருவராக அந்த வீட்டிற்குள் நுழைந்த உமாமகேஸ்வரன், உடல்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு செல்லாமல், வீட்டின் மேல் மாடிக்கு சென்றார். அங்கு கௌரிகாந்தனை கண்டு, அவரது அறைக்கு தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்டார்.

மாடியிலிருந்த தனது அறைக்கு உமா மகேஸ்வரனை, கௌரிகாந்தன் அழைத்துச் சென்றார். கௌரிகாந்தனின் சாரத்தை வாங்கி, உடைமாற்றிக் கொண்டு அந்த அறையிலேயே உமா மகேஸ்வரன் தங்கினார்.

அதிகாலையில் எழுந்து, ஆட்கள் நடமாட்டமற்ற நேரத்தில், வீட்டின் முன்பகுதிக்கு சென்று, உயிரிழந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களிற்கு அஞ்சலி செலுத்தினார்.

16ஆம் திகதி காலையில் அமிர்தலிங்கம், யோகேஸ்வரனின் உடல்கள் இரத்மலானை விமான நிலையம் ஊடாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இருந்து பெருமளவானவர்கள் இரத்மலானை விமான நிலையத்திற்கு சென்றனர். உமாமகேஸ்வரனும் சென்றார்.

உடல்களுடன் செல்பவர்களுடன் உமா மகேஸ்வரனையும் வருமாறு கௌரிகாந்தன் அழைத்தார்.

“இல்லை… நான் வரவில்லை. அங்கு வந்து இந்தியனிடம் சூடு வாங்கி சா*வதை விட, கொழும்பிலேயே இருந்து விடுகிறேன்“ என உமாமகேஸ்வரன் கூறினார்.

அவர் எப்படி திரும்பிப் போவார் என கௌரிகாந்தன் வினவ, உடல்களை வழியனுப்ப வந்தவர்களில் ஒருவரான இளைஞர் ஒருவர், தானே உமாமகேஸ்வரனை அழைத்துச் சென்று இறக்கிவிடுவதாக கூறினார்.

சுழிபுரத்தை சேர்ந்த பூசகர் ஒருவரின் மகன் அந்த இளைஞன். அம்பாறையில் உமாமகேஸ்வரன் நிலஅளவையாளராக பணிபுரிந்த போது, இருவருக்குமிடையில் அறிமுகம் ஏற்பட்டிருந்தது. அந்த அறிமுகத்தை மறக்காமல் இளைஞன் நினைவுபடுத்தி, உமாமகேஸ்வரனை அழைத்துச் சென்றார்.

பம்பலப்பிட்டியில் இறங்கி தனது வீட்டிற்கு சென்று குளித்து, ஓய்வெடுத்த உமாமகேஸ்வரன், மாலையில் மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
காரணம், அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் அவர் மலேசியா புறப்படவிருந்தார்.

தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்திற்கு ஒரு மெய்ப்பாதுகாவலரை மட்டும் அழைத்துச் செல்ல திட்டமிட்டார். தனது மெய்ப்பாதுவலர்களில் ஒருவரான ஆச்சி ராஜன் என்பவரை மட்டும் மாலையில் தனது வீட்டிற்கு வருமாறு உமா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்திலேயே அன்றிரவு தங்க உமா மகேஸ்வரன் திட்டமிட்டுள்ளார்.

இரவு 7 மணிக்கு அண்மித்த நேரத்தில், உமா மகேஸ்வரனின் வீட்டிற்கு ஆச்சி ராஜன் சென்றார்.

உமா மகேஸ்வரன் வீட்டிலிருந்து புறப்படும் போது, எப்பொழுதும் ஒரேவிதமான வழக்கமொன்றை கடைப்பிடித்தார்.

பம்பலப்பிட்டியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து இறக்கினால், அருகிலேயே காலி வீதி உள்ளது. ஆனால், வீட்டிலிருந்து நேராக காலி வீதிக்கு வருவதில்லை.

இப்போதுள்ளதை போல, கடற்கரை வீதிப்பக்கமாக ஆட்கள் நடமாட்டம் இருப்பதில்லை. புகையிரத தண்டவாளத்தினால் சிறிது தூரம் நடந்து சென்று, வேறொரு வீதியினால் வந்தே, காலி வீதியை அடைவார். தனது இருப்பிடத்தை பிறரிற்கு அடையாளம் காட்டக்கூடாது என்பதற்காக அவர் ஏற்படுத்திக் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.

1989ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் திகதி. அண்ணளவாக இரவு 7.30 மணியிருக்கும். தனது குடியிருப்பிலிருந்து, பம்பலப்பிட்டி புகையிர தண்டவாளத்திற்கு செல்லும் சிறிய வீதியால் உமா மகேஸ்வரன் நடந்து சென்றார். அவருக்கு பின்னால் ஆச்சி ராஜன் சென்று கொண்டிருந்தார்.

புகையிரத தண்டவாளத்தினருகில் தனது மெய்ப்பாதுகாவலர்கள் 4 பேர் நிற்பதை உமாமகேஸ்வரன் அவதானித்தார்.

ஆச்சிராஜன் பக்கமாக திரும்பிய உமாமகேஸ்வரன், “உன்னை ஒருவரைத்தானே வரச் சொன்னேன்… இவர்கள் 4 பேரும் ஏன் இங்கே வந்து நிற்கிறார்கள்?“ என கேட்டார்.

‘அவர்கள் சும்மா வந்து நிற்கிறார்கள் போல“ என ஆச்சி ராஜன் பதில் சொன்னார்.

ஜெயா, மதன், ராபின், ராஜன் ஆகியோரே தண்டவாளத்தினருகில் நின்ற மெய்ப்பாதுகாவலர்கள். மெய்ப்பாதுகாவலர்கள் நிற்குமிடத்திற்கு சென்ற உமா மகேஸ்வரன், “இங்கு ஏன் வந்து நிற்கிறீர்கள்… இருப்பிடத்தை காட்டிக் கொடுக்கப் போகிறீர்களா. உடனே இருப்பிடங்களிற்கு செல்லுங்கள்?“ என கடிந்து கொண்டார்.

இதை சொல்லியடியே உமாமகேஸ்வரன், இடதுபக்கமாக திரும்பி – தண்டவாளத்தில் சில அடிகள் எடுத்து வைத்தார். ஆச்சி ராஜன் பின்தொடர ஆரம்பிக்க, தண்டவாளத்தினருகில் நின்ற மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் தனது பி*ஸ்டலை உருவியபடி, ஓரிரண்டு காலடி எடுத்து வைத்து, உமாமகேஸ்வரன் மீது பின்னாலிருந்து சு*ட்டார்.

அடுத்தடுத்து மூன்று தோ*ட்டாக்கள் உமாமகேஸ்வரன் மீது பாய்ந்தன. எந்த மூச்சுப்பேச்சுமின்றி அப்படியே முகம் குப்புற தண்டவாளத்தில் விழுந்தார்.

தான் நம்பி வளர்த்தவர்களில், இந்த துரோகத்தை செய்தவர் யார் என்பதை உமா மகேஸ்வரன் கண்டுகொள்ள வாய்ப்பில்லாமலேயே அவரது உ*யிர் பி*ரிந்தது.

து*ப்பாக்கிச்சூ*ட்டை நடத்தியவர் ராபின்.

தமது தலைவர் மீது ஒருவர் து*ப்பாக்கிச்சூ*டு நடத்தினால், ஏனைய மெய்ப்பாதுகாவலர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் உமா மகேஸ்வரன் மீது து*ப்பாக்கிச்சூ*டு நடத்தியவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென்பதிலிருந்தே, இந்த சம்பவம் மெய்ப்பாதுகாவலர்கள் அனைவராலும் நன்கு திட்டமிடப்பட்டது என்பதை ஊகிக்கலாம்.

உமாமகேஸ்வரனின் தலை, நெஞ்சுக்கு பின்புறமாக முதுகு பக்கமாக 3 தோ*ட்டாக்களும் பா*ய்ந்திருந்தன. எந்த தோட்டாவும் முன்பக்கமாக வெளியேறியிருக்கவில்லை. இதன்மூலம், அவர் எவ்வளவு அருகிலிருந்து சு*டப்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

உமா மகேஸ்வரனை சு*ட்டதும் மெய்ப்பாதுகாவலர்கள் அங்கிருந்து சென்று, பொது தொலைபேசியொன்றிற்கு சென்றனர். பம்பலப்பிட்டி பொலிசாரை தொடர்பு கொண்டு, உமா மகேஸ்வரனை சு*ட்டுவிட்டோம் என தகவல் வழங்கினார்கள்.

பம்பலப்பிட்டி பொலிசார் அதை நம்பியிருக்க மாட்டார்கள். யாரோ தம்முடன் விளையாடுகிறார்கள் என்றுதான் நினைத்திருப்பார்கள்.
பின்னர், பம்பலப்பிட்டியின் மற்றொரு வீட்டில் தங்கியிருந்த புளொட்டின் மற்றொரு அங்கமான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தி எனப்பட்ட சு.சதானந்தமிடம் சென்று, உமா மகேஸ்வரனை சு*ட்ட தகவலை தெரிவித்தனர்.

அவர் உடனே புறப்பட்டு, தண்டவாள பகுதிக்கு சென்றார்.

மெய்ப்பாதுகாவலர்கள் சொன்ன இடத்தில் ஒருவர் சு*டப்பட்டிருந்தார். அருகில் சென்று முகத்தை பார்த்த போது, அது உமாமகேஸ்வரன்தான் என்பதை உறுதி செய்தார்.

அங்கிருந்து புறப்பட்டு, உமாமகேஸ்வரனின் வீட்டிற்கு வந்த ஆனந்தி, உமாமகேஸ்வரனின் மனைவியிடம் விடயத்தை தெரிவித்தார்.

இருவரும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம் சென்று தகவல் வழங்கினார்கள்.

பொலிசார் உமாமகேஸ்வரனின் உ*டலை மீட்ட போது, அவரிடமிருந்த முஸ்லிம் பெயரிலான போலி அடையாள அட்டையையும் எடுத்திருந்தனர்.

அது உமா மகேஸ்வரனின் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், புளொட் விரும்பிய இடத்தில் உமாமகேஸ்வரனின் உ*டலை அ*டக்கம் செய்யலாமென, அப்போதைய அமைச்சர் லலித் அத்துலத்முதலி தெரிவித்திருந்தார்.

புளொட்டின் விருப்பத்தின்படி, வவுனியாவில் வைத்து உடல் கையளிக்கப்பட்டது.

வவுனியா கோயில்குளத்தில் உமாமகேஸ்வரனின் உ*டல் அடக்கம் செய்யப்பட்டது.

உமா மகேஸ்வரன் கொல்லப்பட்டதும், சில மெய்ப்பாதுகாவலர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டனர். சிலர் புளொட்டுடனேயே தங்கி விட்டனர்.

புளொட்டுடன் தங்கிய இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும், பின்னர் புளொட்டினால் விசாரிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் சொன்னார்கள், “இந்த கொ*லை அமைப்பிலிருந்த அனைவருக்கும் தெரியும். அப்படித்தான் நாம் நினைத்தோம். தலைவர் தடைக்கல்லாக இருப்பதை அனைவரும் உணர்ந்தனர். நாம் அவரை கொ*ன்றோம்“ என.

இந்தியா தப்பிச் சென்ற மெய்ப்பாதுகாவலர்கள் பின்னர், மேற்கு நாடுகளிற்கு சென்றனர்.

கனடாவில் இருவரும், பிரிட்டன் மற்றும் சுவிசில் இருவரும் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

இந்தப்பகுதியின் ஆரம்பத்தில், சுவிசில் ஒரு இரட்டைக் கொ*லை நடந்ததாக குறிப்பிட்டேன் அல்லவா. அதில் கொ*ல்லப்பட்டவர்களில் ஒருவரே, உமா மகேஸ்வரனை து*ப்பாக்கியால் சு*ட்டு கொ*ன்றவர்.
அவரது பெயர் ராபின்.

இந்தியாவிலிருந்து சுவிசிற்கு சென்று, தமிழர்கள் அதிகம் வசிக்காத ஒதுக்குப்புறமான பகுதியொன்றில் வாழ்ந்தார். அங்கு சென்ற பின்னர் திருமணமும் செய்திருந்தார்.

புளொட் அமைப்பிலிருந்து நண்பர்கள் யாருடனும் தொடர்பை வைத்திருக்காமல், முற்றிலும் ஒதுங்கிய வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தார்.

உமா மகேஸ்வரன் கொ*லையின் பின்னர் புளொட்டிற்குள் நடந்த விசாரணையில், ராபின்தான் து*ப்பாக்கிச்சூ*டு நடத்தியவர் என்பது உறுதியானது.

அவருக்கு ம*ரணத*ண்டனை விதிப்பதென புளொட் தீர்மானித்தது.

ராபின் யாருடனும் தொடர்பு கொள்ளாத, முற்றிலும் தலைமறைவான வாழ்க்கை நடத்தி வந்தார். அவரது இருப்பிடத்தை அறிந்த புளொட், அவரை அணுகக்கூடிய ஒருவரிடம் கொ*லை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தது.

அவர் ராபினை எப்படி அணுகக்கூடியவர் என்ற விபரத்தை தவிர்த்து விடுகிறேன்..

போலிக்கடவுச்சீட்டு மூலம் அந்த நபரை புளொட்டே சுவிசிற்கு அனுப்பி வைத்தது.

கொ*லைப் பொறுப்புடன் சென்றவர், சுவிசில் சாதாரண வாழ்க்கையை ஆரம்பித்தார்.

புளொட்டின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்து, அமைப்பிலிருந்து விலகி வந்து விட்டதாக அவர் அனைவரிடம் சொன்னார். எல்லோரும் அதை நம்பினார்கள்.

ராபினிற்கும், கொ*லைப் பொறுப்பை ஏற்றுச் சென்றவரிற்குமிடையிலான, அணுகக்கூடிய தன்மை புளொட்டிற்கு சாதகமானது.

அந்த நபர் உண்மையிலேயே புளொட்டை விட்டு ஒதுங்கி வந்து விட்டார் என நம்பிய ராபின், அவருடன் தொடர்பை ஏற்படுத்தினார். தனது வீட்டிற்கும் அழைத்துச் செல்லத் தொடங்கினார்.

ராபினை கொ*ல்வதற்காக வேறு இரண்டு நாடுகளில் மேலும் இரண்டு புளொட் உறுப்பினர்கள் தயார்படுத்தப்பட்டிருந்தனர்.

1995ஆம் ஆண்டு,இந்தக் கொ*லை நடந்தது.

பிரான்சில் தங்கியிருந்த ஒருவரும், நெதர்லாந்தில் தங்கியிருந்த ஒருவருமாக இரண்டு புளொட் உறுப்பினர்கள், சுவிசில் உள்ள புளொட் உறுப்பினரிடம் சென்றனர். இருவரிடமும் பி*ஸ்டல்கள் இருந்தன.

குறிப்பிட்ட நாளொன்றில், ராபினின் வீட்டிற்கு சுவிசிலுள்ள புளொட் உறுப்பினர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அன்று, வெளிநாட்டிலிருந்து வந்த இருவருடனும் அவர் ராபினின் வீட்டிற்கு சென்றார்.

வீட்டிற்குள் நுழைந்து ராபின் மீது து*ப்பாக்கிச்சூ*டு நடத்தப்பட்டது. கொ*லையாளிகளின் திட்டத்திற்கு மாறாக, ராபினின் மனைவி கொ*லையாளிகளை கண்டுவிட்டார். அதனால் அவரும் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டார்.

கொ*லையின் பின்னர், இலங்கையிலிருந்து சென்றவர் இலங்கைக்கே திரும்பி வந்து விட்டார். பிரான்ஸ், நெதர்லாந்திலிருந்து சென்றவர்களும் தமது நாடுகளிற்கு சென்று விட்டனர்.

நெதர்லாந்திற்கு சென்றவர், தனது பிஸ்டலை வீட்டின், சமையலறை மேற்கூரைக்குள் மறைத்து வைத்து விட்டார். அவருக்கு அறிமுகமான- நெதர்லாந்தில் இருந்த மற்றொரு தமிழ் இயக்க உறுப்பினர் ஒருவரிடம் தனது சாகசத்தை கூறிவிட்டார். அந்த இயக்கத் தரப்பினரே அந்த தகவலை நெதர்லாந்து பொலிசாருக்கு அறிவித்தனர். இந்த பகுதியின் ஆரம்பத்தில் அதனையே குறிப்பிட்டிருந்தேன்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments