பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்காது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.

இது தொடர்பான அரசின் தீர்மானம் நேற்றுக் காலை நடைபெற்ற கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள மேற்படி சட்டமூலங்கள் தொடர்பில் எதிர்ப்புகளையும் சந்தேகங்களையும் வெளிப்படுத்தியுள்ள சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் விரிவாகக் கலந்தாலோசித்து, பரந்தளவிலான இணக்கப்பாட்டை எட்டிய பின்னரே அவற்றை நாடாளுமன்றத்தில் முன்னெடுத்துச் செல்ல அரசு எதிர்பார்க்கின்றது என்றும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிப் பலப்பிரயோகங்களைப் பயன்படுத்தி எப்போதுமே ஆட்சியில் நீடிக்கும் குறுகிய நோக்கம் எமது அரசுக்குக் கிடையாது” என்றும் அவர் இதன்போது திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

“சட்டங்கள் மற்றும் அடக்குமுறை விதிகளின் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முற்படும் அரசு நாங்கள் அல்ல” என்று தெரிவித்த ஜனாதிபதி, மக்களின் ஜனநாயகத் தீர்மானத்துக்கு அரசு எப்போதும் மதிப்பளிக்கும் என்றும், தேர்தலொன்றின் மூலம் மக்கள் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றத் தீர்மானித்தால், அதனைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு உடனடியாகப் பதவி விலகத் தயார் என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே, அரசால் முன்மொழியப்பட்டுள்ள மேற்படி இரு சட்டமூலங்களும் நாட்டின் அடிப்படை உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரங்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை முன்வைத்து, தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தன.

இந்தச் சட்டமூலங்களை உடனடியாக மீளப்பெறக் கோரி கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இரு சட்டமூலங்களுக்கும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னர் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் மேலதிக கலந்தாலோசனைகளை நடத்த அரசு தீர்மானித்துள்ளமை ஜனாதிபதியின் இந்த அறிவிப்பின் மூலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments