~தேசியத் தலைவர் .

இதயக்கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள்

எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கின்றது. இவர்களது இறப்புகள் அர்த்தமற்ற இழப்புகள் அல்ல, இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்துசக்தியாக, எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக, எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டன. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள் சுதந்திரச்சிற்பிகள் எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச்சென்ற வீர மறவர்கள் எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையாளர்கள்(தியாகிகள்) காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல அவன் ஓர் இலட்சியவாதி ஓர் உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன் தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்காக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்கை உன்னதமானது. அர்த்தமுள்ள சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப்பிறவிகள், அசாதாரணமான பிறவிகள்.

~தேசிய தலைவர்

மாவீரர்

தேச விடுதலைக்காகத் தம்மை

முழுமையாக- அர்ப்பணித்தும்

எதிரி பாசறையை

வெடிகுண்டு கொண்டு தகர்க்கும்

சத்திய வேள்வியில் நித்தமும் வேகி

கொடியது பறந்திட

உயிரினை ஈய்ந்து

உடலை உரமிட்டு

செங்குருதியால்

வரலாறு படைத்து

தமிழீழ மண்ணெங்கும்

நினைவுச் சிலைகளாய், ஓவியமாய்

வெள்ளை மலரேந்திய வேதங்களாய்

ஈழமண்ணில் புதுவிதையாய்

விடுதலையின் தீச்சுடராகி

தேசமெங்கும் சோதியாய் நிற்பவரே,

மாவீரராவர்.

ஏன் இவர்கள் மாவீரர்கள்?

தமிழ் இனவிடிவுக்காய் மரணித்தவர்கள்.

தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள்.

உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறைபோட்டவர்கள்

தேசமக்களின் பாசப்பிணைப்புகளுக்காக

தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள்.

பள்ளிப்பராயத்தை பள்ளி தோழருக்காய்

பறிகொடுத்தவர்கள்.

ஊரெல்லாம் உறங்கும்வேளை உறக்கமின்றி விழித்தவர்கள்

எல்லைசுற்றி வேலிச்சிலையாய் நின்றவர்கள்

தமது மக்களுக்காய் கால்களை, கரங்களை

இழந்து நின்றவர்கள்.

துயிலும் இல்லம்.

துயிலுமில்ல மைதான நடுவில், பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப்பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வு கொத்தளிப்போடு மைதானத்தைச் சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திடத் தீச்சுடர் ஏற்றப்படும். அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரரின் பெற்றோர் உரித்துடையோர் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர். சமகாலத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும், வாசலிலும் மாவீரரின் சுடர்ஒளியை அனைவரும் ஏற்றுவர்.

சுடரானது சுவாலை விட்டெரியும் ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப்பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர்விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழமக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.

சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவு கூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல தமிழீழமெங்கும் மாவீரர் சுடர்கள் இந் நேரத்தில் எங்கும் ஒளிர வேண்டும். சிட்டி விளக்கேற்றக்கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீபங்கள் எரியும் போது இடங்களில் பெரிய சுடர்களை ஏற்றியும் நினைவுகூரவேண்டும்.

இந்த சுடரேற்றும் நிகழ்வானது, விடுதலைப்பாதைக்கு உறுதியையும், உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.

நவம்பர் 27 இரவு நிகழ்வுகள்

தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை

இன்று மாலை 6.05 மணிக்கு ஒலி எழுப்பும் நிகழ்வு தொடங்கக்கூடியதாக தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிகழ்வு இடம்பெறும்.

நினைவொலி எழுப்புதல். (6.05 மணி)

தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்தவுடன் உடனடியாக 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் மணி ஒலி ஒரு மணித்துளி நேரம் எழுப்பப்படும். உயிர்காப்பு பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.

அகவணக்கம் (6.06 மணி)

மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தப்பட்டவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அகவணக்கம் செலுத்தப்படும். இந்நேரம் இல்லங்களிலும், ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்

ஈகைச் சுடரேற்றுதல் (6.07)

அகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படல் வேண்டும் (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள், நினைவுக் கற்களுக்கு முன்னால் 5.15 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)

மாவீரர் துயிலுமில்லங்களிலுள்ள மாவீரர் கல்லறைகள், நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர் அதேநேரம் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெயர்ந்த மாவீரர் பெற்றோர்கள் அவர்களுக்கென ஒழுங்குசெய்யப்பட்ட இடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்.

இவை தவிர துயிலுமில்லங்களுக்கு வராத பொது மக்கள் தமது இல்லங்களில், பொதுஇடங்களில், அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரிய முறைப்படி ஈகைச்சுடர் ஏற்றுவர். ஈகைச்சுடர் ஏற்றும்போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும் (மாவீரர் ஈகைச்சுடர் ஏற்றப்படும் நேரத்தில் அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாது வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறுவகையில் ஒலி,ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.)

அலங்காரம் (சோடனை)

எமது அமைப்பைச் சார்ந்த வீரச்சாவு, வீரவணக்கக்கூட்டம், துயிலுமில்ல, மாவீரர் விசேட நிகழ்வு, வேறு அனைத்து நிகழ்வுகளுக்கான அலங்காரங்கள், சமூக சமய, வேறு அரசியல் சார்ந்ததாக இருக்காமல், எமது தேசியக்கொடி நிறங்களைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது அலங்கார முறையும், நிறங்களும்

சிவப்பு, மஞ்சள், கறுப்பு வெள்ளை தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும், கறுப்பு கரும்பு*லிகள் தினத்திற்கும் கரும்புலிகள் சம்பந்தமான நிகழ்வுகட்கு மட்டும் கலந்து சோடிக்கலாம்.

வீரச்சாவு கால் நாட்டலுக்கு சிவப்பு, மஞ்சள் துணிகளைப் பாவித்தல் வேண்டும். மேசைவிரிப்பு, பீட விரிப்புகளும் சிவப்பு, மஞ்சள் துணியாகவே இருத்தல் வேண்டும். வெள்ளை விரித்தலைத் தவிர்த்தல் நன்று.

*இச்சோடனைகள் தனித்துவமாக மாவீரர்களின் தற்கொடைத் தியாகம்,அமைப்பு இலட்சியங்களை மக்கள் மனங்களில் தேன்றிப் பதிந்து எமது போராட்டத்தின் பால் இணைந்து செயற்பட வழிசமைத்தல் வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகள்.

ஆரம்ப நிகழ்வுகள்

1. பொதுச்சுடர்

2. தேசியக்கொடியேற்றல்

3. ஈகைச்சுடர்

4. மலர்வணக்கம்

5. அகவணக்கம்

6. உறுதியுரை

7. நினைவுரை

எமது மாவீரர் நிகழ்வுகள் அமைப்பு நிகழ்வுகள் அனைத்திலும் ஈகைச்சுடர் ஏற்றுதல் கட்டாயமாகும். மங்கள விளக்கு ஏற்றக்கூடாது.

அகவணக்கத்துக்கு நேரம் குறிக்கக்கூடாது.

தவிர்க்க வேண்டியவை

அஞ்சலி. மௌன வணக்கம், மலரஞ்சலி. மங்கள விளக்கு, அஞ்சலியுரை, அஞ்சலிக்கூட்டம், அக வணக்கம், – ஒருநிமிடம் இருநிமிடம் எனக்குறித்துக் கூறுதல்.

சேர்க்கப்பட வேண்டியவை

வீரவணக்கம், அகவணக்கம்,மலர்வணக்கம், ஈகைச்சுடர், வீரவனக்கஉரை, வீரச்சாவு வீரவணக்கக்கூட்டம்.இதுவே சரியானது

முக்கிய விடயம்

மாலை 6.00மணிக்குப் பின்னர் எந்த நிகழ்விற்கும் தேசியக்கொடி ஏற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும் இரவில் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுமானால் நிகழ்வு முடிய இறக்குதல் வேண்டும். இவரில் தேசியக் கொடிக்கு வெளிச்சம் இருத்தல் வேண்டும்.

எக்காரணம் கொண்டும் தேசியக்கொடியைக் கம்பத்துடன் மடித்துக்கட்டுதல் தவிர்க்கப்படல் வேண்டும். தேசியக்கொடியை மடித்து பீடத்திற்கு அருகில் ஒரு இருக்கையில் (ஸ்ரூலில்) வைக்க வேண்டும்.

போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும்

எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது, தமிழீழத்தின் விடிவுக்காகவும், உயர்வுக்காகவும், உழைத்து உயிரைத் தற்கொடையாக ஈந்து, இந்த மண்ணிற்கே உரமாகிவிட்டவர்களினதும். எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும். உங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும், எமது சகபோராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம், அவர்களின்

மாவீரர் நாள் கையேடு

உணர்வுகள், இலட்சிய தாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகும், புனிதத் தன்மை வாய்ந்ததுமாகும். காலம் காலமாக நினைவு கூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.

இம் மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழிநடாத்தும் உந்து சக்தியாக. என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக இருந்து விடாது எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும், பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்து வரவேண்டும்.

இந்த எமக்குரிய உயரிய நிகழ்வை தத்துவார்த்த மாகவும், உணர்வு பூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த, ஒருங்கிணைந்த பங்களிப்புகளை வேண்டி நிற்கின்றோம்.

நன்றி!

மாவீரர் நாள் கையேடு

மாவீரர் நினைவாக அனுஷ்டிக்கப்படும் நாட்கள்.

01) கடலில் காவியமான கிட்டு உட்பட பத்து வேங்கைகள் நினைவாக: 16.01.1993

02) அன்னை பூபதி அம்மா நினைவு நாள்: 19.03.1988 / மார்ச் மாதம் 19ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி வரை: 19.04.1988

03) கரும்பு*லிகள் தினம்: 05.07.1987

04) தியாகதீபம் திலீபன் நினைவுநாள்: 15.09.1987 / செப்டம்பர் 15ஆம் திகதி தொடக்கம், செப்டம்பர் 26ஆம் திகதி வரை: 26.09.1987

05) குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்த நாள், ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி: 05.10.1987

06) தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த முதற்பெண்புலி மாலதி – (தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்): 10.10.1987

07) மாவீரர் நாள், நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம், நவம்பர் மாதம் 27 வரை

இதில் சில விடையங்கள் மாத்திரமே மேலும் அரசியல் எண்ணத்துடன் துயிலுமில்லத்தில் காலடி வைப்பது முற்றாக தடை, மேலும் தற்காலத்தில் தேவையற்ற புகைப்படம் எடுப்பது மற்றும் டிக்டொக் எடுக்க வேண்டாம்.

புனிதர்கள் உறங்கும் கல்லறைகளுக்கு மதிப்பளியுங்கள்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments