சீன அரசு கைச்சாதிட்ட வீட்டுத் திட்டத்தின் இணை ஒப்பந்தம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் 1,888 வீடுகள் மற்றும் 108 மூத்த கலைஞர்களுக்கான வீடுகள் ஆகிய வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கிவு சென்ஹோன்ங் ( Qi Zhenhong) ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் டாங் யாண்டி (Tang Yandi) மற்றும் சீனத் தூதரகத்தின் மூத்த அதிகாரிகள் உட்பட திட்டக் கட்டிடக்கலை வடிவமைப்பு ஆலோசகர்களுடன் இணைந்து கொண்டனர்.
வீடமைப்பு பிரதி அமைச்சர் டி. பி. சரத், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எல். பி. குமுதுலால் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
பேலியகொடை, தெமட்டகொட, மொரட்டுவ, மஹரகம ஆகிய இடங்களில் இந்த வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படுவதுடன், கொட்டாவ பிரதேசத்தில் மூத்த கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன.
இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களில் நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது