அடேலைட்டில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சி பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அடிலெய்டில் நடைபெற்றது. தெற்கு அவுஸ்திரேலிய தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு வழமைபோல இம்மாவீரர் நாள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நவம்பர் 27 2024 புதன்கிழமை மாலை 5:40 ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில், முதலில் தெற்கு அவுஸ்திரேலியாவை மையமாக கொண்டு இயங்கும் இலங்கை தமிழ்ச் சங்கம், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்- தெற்கு கிளை , அடேலைட் தமிழ்ச் சங்கம், மக்கள் நலன் காப்பகம் – அவுஸ்திரேலியா , அவுஸ்திரேலிய தமிழர் கலைகள் மற்றும் பண்பாட்டு மையம், தமிழர் விடுதலை நடுவம், நாம் தமிழர் – தெற்கு அவுஸ்திரேலியா ஆகியவற்றின் தலைவர்கள் பொதுச்சுடர் ஏற்றி வைத்தனர்.
அதனை தொடர்ந்து தேசிய கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அவுஸ்திரேலியா தேசியக் கொடியினை ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி கத்தரின் ரஸ்ஸல் அவர்களும், பூர்வக்குடிகளின் கொடியை மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு குமார் நல்லரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசிய கொடியினை தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு வையாபுரி சுதாகரன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
சரியாக மாலை 6:05 மணியோசையுடன் மாவீரர் நாள் பாடல் ஒலிக்க, பிரதான முதன்மை ஈகைச்சுடர் மற்றும் மாவீரர்களுக்கான ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன. அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவராலும் மாவீரர் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செய்யப்பட்டது. மலர்வணக்க முடிவில் அகவணக்கத்தோடு மாவீரர் நாளை ஒட்டிய கலை நிகழ்வுகள் மற்றும் உரைகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழர் பறையிசையும் இசைக்கப்பட்டது. அதனை தமிழர் கலைகள் மற்றும் பண்பாட்டு மைய கலைஞர்கள் வழங்கினர். தொடக்க நடனத்தினை செல்வி பிருத்திகா பிரதீபராயன் மற்றும் பிரவீனா பிரதீபாராயன் ஆகியோர் வழங்கினார். நினைவுரையினை ஆங்கில மொழியில் வைத்தியர் ஜெயசாகரன் புண்ணிய மூர்த்தி வழங்கினார். அதனை தொடர்ந்து மாவீரர் பாடலை திரு ராஜேஷ் பாஸ்கரன் அவர்கள் பாடினார். தேசிய தலைவர் தொடர்பான பாடலுக்கு செல்வி சிந்துயா கிருபாகரன், செல்வி சகானா மாறன், செல்வி விஷ்ணுயா தர்மதாஸ் ஆகியோர் ஆகியோர் நடனத்தினை வழங்கினார்.
அதனை தொடர்ந்து சிறுவர்களின் மாவீரர் பேச்சு இடம்பெற்றது. அதனை குழுவாக செல்வன் தினுசன் சுதாகரன், விஷால் முரளியிதரன், மில்லர் பாஸ்கரன், ஹரிபிரஷாத் சூரியகுமார் ஆகியோர் வழங்கினர். திரு கார்த்திக் அவர்கள் மாவீரர் பாடலை வழங்கினார். அடுத்து நினைவுரையினை திரு குமார் நல்லரட்ணம் வழங்கினார்.
அடுத்ததாக மாவீரர் கவிதையினை திரு பிரதீபாராயன் பஞ்சாசரம் அவர்கள் வழங்கினார். சிறப்புரையினை திரு கிறிஸ்தோபர் செலஸ்டின் அவர்கள் வழங்கினார்.
உணர்வுப்பெருக்கோடு மக்கள் கலந்துகொண்ட மாவீரர் நாளானது தேசிய கொடிகள் இறக்கத்தோடு நிறைவுபெற்றது.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு – தெற்கு அவுஸ்திரேலியா
27-11-2024