முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் குரங்குகளின் சடலங்கள் இனம் காணப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பாவனையிலிருந்து வரும் குடிநீர் தாங்கியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் குறித்த பாடசாலையில், இவ்வாறான நிகழ்வு நடைபெற்றது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், மாணவர்களுக்கான குடிநீர் சுகாதாரமாக வழங்கப்படாதது தொடர்பில் சகலரும் தங்கள் பொறுப்புக்களை சரிவர செய்திருக்கவில்லை.
இவ்வாறு செய்திருந்தால் குடிநீர் தாங்கியில் குரங்கு விழுந்து இறந்து அழுகியிருந்திருக்காது என பெற்றோர்கள் தங்கள் அதிருப்தியினை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
2ஆம் தவணை விடுமுறை முடிந்து 3ஆம் தவணை கற்பித்தல் காலமாக பாடசாலைகள் இந்த வாரம் முதல் நாளிலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவவாறான நிலையில் பாடசாலையில் உள்ள குழாய் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்களால் ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினு, அது குறித்து அக்கறையற்று ஆசிரியர்கள் இருந்துள்ளனர்.
சில மாணவர்களால் இது தொடர்பில் பழைய மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படவே, நீர்த்தொட்டியை பரிசோதிக்க முடிவெடுத்துள்ளனர்.
அவ்வாறு பரிசோதித்த வேளை குடிநீர் தொட்டியின் மேல்பக்க மூடி திறந்துவிட்ட நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.
குடிநீர்த்தொட்டியினுள் குரங்கு அழுகிய நிலையில் அதன் உடல் உருக்குலைந்து எலும்புகள் சிதறும் நிலையில் இருந்துள்ளதையும் காணமுடிந்துள்ளது.
இந்த நிகழ்வுடன் தொடர்புபட்ட பழைய மாணவர் ஒருவருடன் உரையாடிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, சில பெற்றோரும் மற்றும் பழைய மாணவர் சிலரும் இது தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அபயம், மற்றும் சுகாதார பிரிவினர், கல்வி சார் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதோடு குறித்த பாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் இருந்து நீரை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.