வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல கிழக்கில் இரா. சாணக்கியன் இங்குள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அடக்கி சிங்களமயமாக்கலுக்குத் துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வடமுனை ஊத்துச்சேனை கிராம மக்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று (10-05-2026) கட்சியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தலைமையில் ஊத்துச்சேனையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் பெரும்பான்மை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்கக் கூடாது என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களைச் செய்து கொண்டு வருகின்றனர்.
அந்தக் குடியேற்றங்கள் தென் தமிழ்த் தேசத்தின் கிழக்கு மாகாணத்தில் பிரதானமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கூடுதலாக அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களில் இந்தத் திட்டங்கள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் குடியேற்ற வேலைத்திட்டம் மிக மோசமாக இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தை முற்று முழுதாகச் சிங்களமயப்படுத்துவதற்கு மட்டக்களப்பு அதன் இதயமாக இருக்கிறது.
இதனை நேரடியாக மாற்றுவது மிகவும் கடினம் எனவே, கிழக்கு மாகாணத்தின் இரண்டு எல்லைகளை முற்று முழுதாகச் சிங்களமயமாக்குதல் அதாவது அம்பாறையையும் திருகோணமலையையும் சிங்களமயமாக்கி அதில் இருந்து படிப்படியாக முன்னேறி மட்டக்களப்பைத் தனிமைப்படுத்திய பின்னர் மட்டக்களப்பில் கைவைக்கலாம் என்பதே ஒரு திட்டம்.
புலிகளின் போராட்டம்
அதற்கமைய கிழக்கின் இரண்டு எல்லைகளைச் சிங்களமயமாக்கும் வேலைத்திட்டம் போர்க்காலத்துக்கு முன்னரே முடிந்தது.
எனவே, தமிழ் மக்களின் தேச அந்தஸ்தை அங்கீகரித்து எங்களை நாங்களே ஆளக்கூடிய சமஷ்டி தீர்வை வழங்க வேண்டும் அல்லது பிரிந்தாவது போக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் அரசியலில் 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடுத்தனர்.
அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின் பெரியளவில் குடியேற்றம் செய்ய முடியவில்லை.

ஆனால், 2009-க்கு பின்னர் போராட்டத்திற்கு ஒட்சிசனாக இருந்த மக்களை அழித்து இனவழிப்பைச் செய்த பின்னர் இன்று மட்டக்களப்பில் கைவைக்க ஆரம்பித்துள்ளனர். இதுதான் உண்மை.
கிழக்கில் விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தைச் சிங்களமயப்படுத்தவும் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையைக் கைப்பற்றவும் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் ராஜபக்ச தரப்பு மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்தது.
இதன்போது சோளச் செய்கை என்ற பெயரில் கள்ள உறுதிகளை வழங்கிச் சட்டவிரோதமாகச் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தினர்.
இதன்போதுதான் பண்ணையாளர்கள் கால்நடைகளைக் கொண்டு செல்லும்போது குடியேறிய சிங்களவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
தேசியப் பட்டியல்
இவ்வாறுதான் மட்டக்களப்பு எல்லைக் கிராமமான ஊத்துச்சேனை கிராமமும் அதே வேலைத்திட்டத்துக்குள் கொண்டுவரப்படுகின்றது.
மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சனையைக்கூட ஏன் மட்டக்களப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் தடவையாக வெளிக்கொண்டு வரவில்லை?
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மட்டக்களப்புக்கு வந்து இந்தப் பிரச்சனை பற்றி முதல் தடவை கேட்டபோது அவர் அந்த இடத்திற்குச் சென்று முதல் தடவையாக ஊடகங்களுக்கு வெளிக்கொண்டு வந்தார்.

ஏன் இங்கு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அநியாயத்தை முன்னுரிமைப்படுத்தி வெளிக்கொண்டு வரவில்லை?
சிங்களமயப்படுத்துகின்ற வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் ஒரு எல்லை வரைக்கும் கொண்டு போவதற்கு இந்த மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அமைதியாக இருந்தனர் ?
அமைதியாக இருந்தால் மட்டும்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற செ. கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வந்து பேசினால் தேவையில்லாத பிரச்சனையை எழுப்புகிறார்கள் என்று பொய்யைச் சொல்லிக் கொச்சைப்படுத்தி இன்னும் கொஞ்சக் காலம் மூடி மறைக்கலாம் என்பதுதான் நோக்கமாக இருக்கலாம்.
அவர்கள்தான் உங்களிடம் வாக்குக் கேட்கப் போகின்றனர். உங்கள் பிரச்சனையை முன்நின்று வெளிக்கொண்டு வரவேண்டியது அவர்களின் பொறுப்பு. அது ஏன் நடக்கவில்லை ? ஏனென்றால் அவர்களும் இதற்கு முழுமையாகத் துணை போகின்றனரா ?
தமிழ்த் தேசியம்
வடக்கில் இருக்கும் எம்.ஏ. சுமந்திரன் போல கிழக்கில் இருக்கும் இரா. சாணக்கியன் இங்குள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அவர்களை அடக்கி, இந்தச் சிங்களமயமாக்கலுக்குத் துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா ?
நான் கேட்பது தமிழ்த் தேசியம் பேசி நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்ற தமிழரசு கட்சி உறுப்பினர்களைப் பற்றித்தான்.
உண்மையில் எல்லைப் பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் உள்ள மக்களைத் தக்கவைத்தால் மட்டும்தான் இந்த மண்ணில் வாழ முடியும்.

இந்த மண்ணை விட்டுவிட்டுப் போவீர்களானால் இந்தக் காணி சுருங்கும். இந்த இடம் தொடர்ந்து தமிழர்களுடையதாக இருக்க முடியுமா ? எல்லையைப் பாதுகாப்பது என்றால் அந்த எல்லையில் இருக்கக்கூடியவர்களுக்கு வசதிகளையும் அவர்களது பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தால் மட்டும்தான் அவர்கள் நின்று பிடிப்பார்கள், எங்களது நோக்கம் அதுதான்.
நாங்கள் உங்களைத் தேடி வருவதற்கான காரணம், எங்களுடைய அரசியல் தமிழ்த் தேசத்தைப் பாதுகாப்பதாக இருந்தால் எங்கள் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
எல்லைகள் பாதுகாக்கப்படாது இருந்தால் எங்கள் தேசத்தின் நிலப்பரப்பு சுருங்கும் அதுதான் எதிரியின் விருப்பம்.
ஆகவேதான் நாங்கள் எங்கு மக்கள் பிரச்சனையாக இருக்கின்றதோ அங்கு தேடிச் சென்று அந்தப் பிரச்சனைகளை ஆகக் குறைந்தது வெளிக்கொண்டு வருவோம் என நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
