கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக நேற்று(20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

 அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை 

தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார்.

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்ஹ, காணி ஆணையாளர் நாயகம், முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Gallery
Gallery
Gallery
Gallery
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments