துட்டகைமுனு காட்டிய யுத்த தர்மமும்.. இன்றைய பேரினவாதத்தின் சீரழிவும்!
வரலாறு என்பது வெறும் வெற்றியாளர்களின் கதைகளை மட்டும் பேசுவதல்ல. அது போர்க்களத்திலும் காக்கப்பட்ட மனிதநேயத்தின் அளவுகோலாகும். ஒரு சமூகத்தின் உண்மையான நாகரிகம் என்பது, அது தனது எதிரியை, குறிப்பாக மரணித்துப் போன எதிரியை எவ்வாறு நடத்துகிறது என்பதிலேயே வெளிப்படுகிறது. ஆனால், வரலாற்று ஏடுகளில் மனிதநேயத்தைப் பொறித்து வைத்த இந்த மண்ணில், இன்று இறந்துபோன சொந்த உறவுகளுக்காகக் கண்ணீர் சிந்துவது கூடக் குற்றமாகப் பார்க்கப்படும் கொடூரம் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றைக் கூறும் மகாவம்சம், துட்டகைமுனு மன்னனின் கதையை நமக்கு நினைவூட்டுகிறது. அனுராதபுரத்தை 44 ஆண்டுகள் நீதி வழுவாது ஆட்சி செய்த தமிழ் மன்னனான எல்லாளனைப் போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று தோற்கடித்தான் துட்டகைமுனு. ஆனால், வெற்றிக்குப் பிறகு அவன் நடந்துகொண்ட விதம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
எல்லாளனின் வீரத்தையும் நேர்மையையும் மதித்த துட்டகைமுனு, அவனுக்குரிய சகல அரசு மரியாதைகளுடன் ஈமக்கிரியைகளைச் செய்தான். அதுமட்டுமன்றி, எல்லாளனின் நினைவாக அனுராதபுரத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பி, “இந்த வழியால் செல்லும் எவராக இருந்தாலும், அவர் எந்த இனத்தவராக இருந்தாலும், ஒரு நிமிடம் நின்று அஞ்சலி செலுத்தி விட்டே செல்ல வேண்டும்” என்று தன் சொந்த சிங்கள மக்களுக்கு ஆணையிட்டான். அதுவே உண்மையான பௌத்த தர்மத்தின் வெளிப்பாடாக இருந்தது.
இதேபோன்றதொரு பண்பாட்டைத் தான் வன்னி நிலப்பரப்பை ஆண்ட பண்டார வன்னியனைத் தோற்கடித்த ஆங்கிலேயப் படைகளும் பின்பற்றின. எதிர்த்துப் போராடிய அவனது மாபெரும் வீரத்தைப் போற்றும் வகையில், கற்சிலைமடுவில் ஆங்கிலேயர்களாலேயே ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
கடந்தகால ஆயுதப் போராட்டக் காலத்திலும் தமிழ் மக்கள் இந்த எதிரிக்கான மரியாதையைப் பேணத் தவறவில்லை. இந்திய அமைதிப்படையுடன் போர் நடந்த காலத்தில், உயிரிழந்த இந்திய சிப்பாய்களின் புதைக்கப்பட்ட இடங்களை தமிழ் மக்கள் இடித்து அழிக்கவில்லை; அவற்றைச் சேதப்படுத்தாது பராமரித்தனர்.
அதேபோல, இலங்கைப் படைகளுடனான மோதல்களின் போது போர்க்களத்தில் கைப்பற்றப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) மூலமாக உரிய மரியாதையுடன் கையளிக்கப்பட்டன. சிறிலங்கா அரசு ஏற்க மறுத்து கைவிடப்பட்ட உடல்கள் உரிய இராணுவ மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டன. மரணத்திற்குப் பின் மனித உடல் என்பது வெறுமனே மதிப்பிற்குரிய ஒன்று என்ற உயரிய நெறிமுறை அங்கு பேணப்பட்டது.
ஆனால், இன்றைக்கு பௌத்தத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் வெறுப்புப் பரப்புரைகளும் அடக்குமுறைகளும், புத்தர் போதித்த தர்மத்திற்கே நேர் எதிரானவை. இறந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்துவதையும், அவர்களை நினைவுகூர்வதையும் மறுக்கும் ஒரு மனநிலை எவ்வாறு பௌத்தமாக இருக்க முடியும்?
2009 போரின் முடிவிற்குப் பிறகு வரலாற்று ஏடுகளில் பௌத்த தர்மத்தைப் படித்த அதே மண்ணில், போர்க்கள விதிகளையும் மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் கொடூரங்களே எஞ்சியுள்ளன.
தமிழ் மக்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த, போரில் மரணித்த தங்களது பிள்ளைகளை அடக்கம் செய்த “துயிலும் இல்லங்கள்” எனப்படும் புனித நிலங்கள், போர் முடிந்த கையோடு புல்டோசர்கள் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. கல்லறைகள் உடைத்தெறியப்பட்டு, மண்ணோடு மண்ணாகக் கிளறி எறியப்பட்டன. உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில், இறந்து மண்ணுக்குள் உரமான உடல்கள் மீதும் தங்களது வன்மத்தை அரச இயந்திரம் தீர்த்துக் கொண்டது.
இன்று, தங்களது சொந்தப் பிள்ளைகளுக்கு, கணவனுக்கு, பெற்றோருக்கு ஒரு சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதைக் கூட எப்படி தடுக்கலாம் என்றுதான் சிந்திக்கிறார்கள் சிங்கள ஆட்சியாளர்கள.
5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, சொட்டு நீரும் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நல்லூரில் அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் சிலையொன்றினை நிறுவி அஞ்சலி செலுத்த முற்படும் மக்கள் மீது முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன.
2022 ஆம் ஆண்டில் தீலிபன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வீதியில் வைத்து அநாகரிகமாகக் கைது செய்யப்பட்டார்.
2023 ஆம் ஆண்டில் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி சிங்கள தீவிரவாதக் குழுக்களால் தமிழரின் தலைநகரான திருகோணமலையில் வைத்து வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டது.
இன்றுவரை திலீபனின் சிலைக்கு எதிராகவும், நினைவேந்தல்களுக்கு எதிராகவும் பேரினவாத சக்திகள் கொதித்தெழுகின்றன. காவல்துறையைப் பயன்படுத்தி அந்தச் சிலைகளை அகற்றுவதற்கும், நினைவேந்தல்களைத் தடை செய்வதற்கும் நீதிமன்றப் படிகளை ஏறுகின்றன.
சமூக வலைத்தளங்களில் போலிப் படங்களையும், கேலிச்சித்திரங்களையும் பரப்பி, “வடக்கில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குகிறது” என்ற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் அப்பாவி சிங்கள மக்களின் மனங்களில் இனவாத நஞ்சை விதைக்கின்றனர்.
உண்மையான பௌத்த தர்மம் என்பது உயிர்களிடத்தில் கருணை காட்டுவதும், இறந்தவர்களின் ஆன்மாவை மதிப்பவதுமாகும். ஆனால், இன்றைய பேரினவாதிகளின் செயல்களைப் பார்க்கும்போது, அவர்கள் புத்த பெருமானின் போதனைகளை முற்றிலும் மறந்து, இனவாத இருளுக்குள் மூழ்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இறந்த சொந்தங்களை நினைத்து அழுது, ஒரு பூவைத் தூவி அஞ்சலி செலுத்துவதைக் கூட “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தும் கோரமான மனநிலையுள்ள ஒரு சமூகக் கட்டமைப்புடன் தமிழ் மக்கள் எவ்வாறு தங்களது சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் இணைந்து வாழ முடியும்?
இறந்தவரின் நினைவைக்கூட சகித்துக் கொள்ள முடியாத பேரினவாத மனநிலையோடு எந்த அடிப்படையில் நல்லிணக்கம் பேச முடியும்?
இந்தக் கேள்விகள் தான் இன்று தமிழ் மக்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய கேள்விகளாகும்.
தமிழ் மக்கள் தமக்கான தனித்துவமான தேசமாக, சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்று ஆயுதம் ஏந்திப் போராடியதன் நியாயத்தை, இன்று நிகழும் இத்தகைய அடக்குமுறைகளே மீண்டும் மீண்டும் உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
வாழ்வதற்கும் உரிமை மறுக்கப்பட்டு, இறந்த பிறகு நினைவுகூர்வதற்கும் உரிமை மறுக்கப்படும் ஒரு இனத்திற்கு, தன்மானத்துடன் வாழக்கூடிய ஒரே வழி “சுயநிர்ணய உரிமை” மட்டுமே என்பதை இன்றைய அரசியலும், காலமும் நமக்கு அழுத்தமாகக் கற்றுக்கொடுக்கிறது.
வரலாற்று ரீதியாகவும், மொழி மற்றும் கலாச்சார ரீதியாகவும் தனித்துவமான ஒரு தேசிய இனமாக வாழும் தமிழ் மக்கள், தங்களது உரிமைகளும் பாதுகாப்பும் தொடர்ச்சியாக மறுக்கப்படும் போது, சுயநிர்ணய உரிமைக்காகப் போராடியதன் நியாயத்தை இத்தகைய அடக்குமுறைகளே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
மனிதநேயமும், பரஸ்பர மரியாதையும் அற்ற இடத்தில் ஒருபோதும் நல்லிணக்கம் மலர முடியாது. இறந்தவர்களின் நினைவுகளை மதிக்கும் மனப்பக்குவம் எப்போது இந்த மண்ணில் உருவாகிறதோ, அப்போதுதான் உண்மையான அமைதிக்கான முதல் அடி எடுத்து வைக்கப்படும்.
உண்மையான சமாதானமும் நல்லிணக்கமும் வெறும் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களால் மட்டும் வந்துவிடாது. அது மனிதநேயத்திலும், பரஸ்பர மரியாதையிலும், கடந்த கால காயங்களை ஆற்றுவதிலுமே தங்கியுள்ளது.
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அங்கீகரிப்பதும், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மதிப்பவதும் மட்டுமே ஒரு ஜனநாயக நாட்டின் முதன்மைப் பொறுப்பாகும். வரலாற்றுப் பாடங்களிலிருந்து கற்றுக்கொண்டு, இனவாதப் போக்குகளைக் கைவிட்டு, மனித உரிமைகளை மதித்து நடப்பதே இலங்கை எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உண்மையான தீர்வாக அமையும்.

-ஈழமாறன்
