இலங்கையில் பெண்களுக்கு இடையே அதிகமாகக் கண்டறியப்படும் புற்றுநோய்களில் ஒன்றான மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிக்கவும், நாடு தழுவிய சிறப்பு தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நவம்பர் 02 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மகளிர் நாடாளுமன்றக் குழுவின் தலைவியான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற மகளிர் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், சுகாதார அமைச்சு அதிகாரிகள் மார்பகப் புற்றுநோயின் தற்போதைய நிலைமை மற்றும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தனர்.

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய தேசிய வேலைத்திட்டம் | National Programme Early Detection Breast Cancer

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 6,000 புதிய மார்பகப் புற்றுநோய் சம்பவங்கள் பதிவாவதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000 பெண்கள் இந்நோயால் உயிரிழப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் அதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்ற போதிலும், பயம், கூச்சம் அல்லது விழிப்புணர்வின்மை காரணமாக சிகிச்சையைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் ஒரு முக்கிய சவாலாகவே காணப்படுகின்றன.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 02) பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மற்றும் மாவட்ட மட்டத்தில் சுகாதார முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வதுடன், இந்நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இளஞ்சிவப்பு நாடாக்கள், இளஞ்சிவப்பு கைப்பட்டைகள் மற்றும் இளஞ்சிவப்பு ஆடைகள் உட்பட இளஞ்சிவப்பு நிறச் சின்னங்களைப் பயன்படுத்துவதன் மூலம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில் தங்களது தீவிர பங்கேற்பைக் காட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கும் மகளிர் அமைப்புகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துப் தரப்பினரையும் ஒன்றிணைத்து, 35-45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments