மட்டக்களப்பில் 9 வயது சிறுமிக்கு இரும்புக் கரண்டியால் சூடு வைத்து, ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றத்துக்காக சிறுமியின் சித்திக்கு (25 வயது) 7 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார்.

அந்த சிறுமியின் தாய் இல்லாத நிலையில் அவரது தந்தை குறித்த சந்தேக நபரை மறுமணம் செய்துகொண்டார்.

தனது கணவரின் முதல் மனைவியின் 9 வயது மகளை கடந்த 2015 மார்ச் 10ஆம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 10ஆம் திகதி வரையான ஒரு வருட காலத்தில் தொடர்ச்சியாக இரும்புக் கரண்டியால் சூடு வைத்தும் வாயில் துணியை அடைந்து அடித்து துன்புறுத்தியும் சித்திரவதை செய்து வந்துள்ளார்.

சிறுமியின் சித்தியை 2016இல் பொலிஸார் கைது செய்து அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் பின்னர், விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், இவ்வழக்கு 2022இல் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்ததையடுத்து, கடந்த 13ஆம் திகதி சந்தேக நபர் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, மேற்படி தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறுமியின் சித்திக்கு முதலாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டாவது குற்றத்துக்கு தலா ஒரு குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் மூன்றாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் தண்டனையை சமகாலத்தில் செயல்படுத்துமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பினை அறிவித்தார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments