தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய உலக நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று(28.10.2026) அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கைத் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற உப குழுவின் உப தலைவருமான சுவலோய் மஜும்தார், நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாகிஸ், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடா நீக்க வேண்டும்! சிறீதரன் எம்.பி. வலியுறுத்தல் | An Appeal To Tamils Living In Canada

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் கனடாவைச் சேர்ந்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமலிதனும் அவரது குழுவினரும் பங்கேற்றிருந்தனர். இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இதன்போது சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடைகள்

கனடா இந்த விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துத் தடையை நீக்குவதுடன், ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து தமது கட்சித் தலைமையுடன் ஆலோசித்துச் சாதகமான முடிவை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடா நீக்க வேண்டும்! சிறீதரன் எம்.பி. வலியுறுத்தல் | An Appeal To Tamils Living In Canada

இந்தச் சந்திப்பில் இரண்டாவது முக்கிய விடயமாக, யாழ்ப்பாணம் – செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளுக்குச் சர்வதேச தரத்திலான தடயவியல் தொழில்நுட்ப உதவிகளையும் நவீன ஆய்வு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்குச் சர்வதேச நிபுணர்களின் நேரடிப் பங்களிப்பு, மனித எச்சங்களை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிப்பதற்கான நவீன தடயவியல் கருவிகள் ஆகியன அவசியமானவை என்று சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதற்காகக் கனடா உரிய தொழில்நுட்ப உதவிகளையும் சர்வதேசத் தடயவியல் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments