நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், தங்கள் வாக்குகளால் எனக்கு ஆணை வழங்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியற் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
புதிய எம்.பிக்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியீடு
பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர், இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அவரது செய்திக் குறிப்பில் மேலும் உள்ளதாவது, கடந்த 15 வருடகால அரசியற் பயணத்தில் என் ஆத்ம பலமாகவும், அரசியற் பலமாகவும் தம் உடனிருப்பை வழங்கி, கொள்கையின்பாற்பட்ட பயணத்தின் பங்குதாரர்களாக இருந்த உங்கள் ஒவ்வொருவரது கரங்களையும் நன்றியோடு பற்றிக்கொள்கிறேன்.
திட்டமிட்டு பின்னப்பட்ட சதிவலைகளின் உள்ளிருந்தவாறே, தமிழ்த்தேசியத்தின் இருப்புக்காய் போராடத் தலைப்பட்ட என்னையும், எனது பாதையையும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற நிறைவே, எனது அரசியற் பணியையும் பயணத்தையும் இன்னும் வலுவூட்டும்.
என்னுள் நானாக இருந்து என்னை இயக்கும் எங்கள் தேசத்தில் விதையுண்ட ஆத்மாக்களின் அரூப பலத்தோடு, என் மக்களுக்கான தமிழ்த்தேசியப் பயணத்தை தடையற்றுத் தொடர்வேன்.
நிலையிழக்க வைத்த அலைகளின் நடுவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு கிடைத்த இந்த வெற்றி கார்த்திகையின் கனதியை உறுதி செய்யட்டும் – என்றுள்ளது