கையூட்டல் வழங்க முயற்சித்த வழக்கில், இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, அதானி குழுமத்துடனான பல உத்தேச ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
சூரிய சக்தி ஒப்பந்தங்களுக்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது, நியூயோர்க்; நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அடுத்தே, அதானி குழுமத்துடனான விமான நிலைய ஒப்பந்தத்தை கென்யா இரத்து செய்துள்ளது.
அத்துடன்,அதானி நிறுவனத்துடன், கடந்த மாதம், மின்சாரம் கடத்தும் பாதைகளை அமைப்பதற்காக, நாட்டின் எரிசக்தி அமைச்சகம் கையொப்பமிட்ட 30 வருட, 736 மில்லியன் டொலர் பொது-தனியார் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கும் தாம் உத்தரவிட்டதாக கென்ய ஜனாதிபதி வில்லியம ரூட்டோ கூறியுள்ளார்.
அதானி மறுப்பு
உலகப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி மற்றும் ஏழு பேர், இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டொலர் அதாவது 2,029 கோடி ரூபாய்களை லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை நீதிமன்றில் குற்றம் சுமத்தியிருந்தனர்.
அத்துடன், இதனை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். எனினும் அதானி குழுமம், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், சாத்தியமான அனைத்து சட்டப்பூர்வ வழிகளையும் நாடுவதாக, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.